கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் பேரவைக்கு வராமல் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர், உடல் நலம் சற்று தேறினாலும் வீட்டில் இருந்தே செவிலியர் உதவியுடன் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி தற்போது வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவருக்காக் கொண்டாடிய வைரவிழா மற்றும் பிறந்தநாள் விழாவில் கூட கருணாநிதியால் கலந்து கொள்ள முடியவில்லை.

மேலும் கடந்த 14 ஆம் தேதிமுதல் நடைபெற்று வரும் சட்டப்பேரவையிலும் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை.

பேரவையில் எந்த ஒரு உறுப்பினரும் 60 நாட்கள் கலந்து கொள்ளாமல் இருந்தால் அவரின் பதவி காலியானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது விதி.

ஆனால் பேரவை அனுமதி பெற்று பேரவைக்கு வராமல் இருக்கலாம் என்பதும் விதியில் உள்ளது.

இந்நிலையில், கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் பேரவைக்கு வராமல் இருக்க சட்டப்பேரவையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதற்கு துரைமுருகன் வழிமொழிந்தார்.

பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு பேரவை தலைவர் தனபால் அனுமதித்தார். அதில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் கருணாநிதி பேரவைக்கு வராமல் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.