karunanidhi is safe now kauvery hospital statement

திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்றும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு சுவாசக் கோளாறு காரணமாக கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை நேற்று முன்தினம் விளக்கம் அளித்தது.

கருணாநிதியின் உடல்நலத்தில் வயது மூப்பு காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. 

தொடர் சிகிச்சைக்காக கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்ஸில் அவருடன் மருத்துவர்கள் உடனிருந்தனர். 



பின்னர் காவேரி மருத்துவமனையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, ‘திடீரென்று ஏற்பட்ட ரத்த அழுத்த குறைபாடு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது 20 நிமிட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.