karunanidhi changes his spex after 46 years

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி 46 ஆண்டுகளுக்குப் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.

கருணாநிதி என்றாலே அனைவரின் ஞாபகத்துக்கு வருவது அவரது கறுப்பு கண்ணாடிதான். அவர் அரசியலில் நுழைந்த காலத்தில் இருந்தே கண்ணாடி அணிந்து வந்தாலும், கடந்த 46 ஆண்டுகளாக ஒரே கண்ணாடியை கருணாநிதி அணிந்து வருகிறார்.

இந்நிலையில் கருணாநிதி அணிந்திருந்த கருப்புக் கண்ணாடி மிக தடிமனாக இருப்பதால், அது அவரது மூக்குப் பகுதியை அழுத்தி அதனால் அவருக்கு பிரச்னை ஏற்படுவதை மருத்துவர்கள் சமீபத்தில் கண்டறிந்தனர்.

அதனால், அவரது கண் பார்வைக்கு ஏற்ற வகையில் புதிய லேசான மூக்குக் கண்ணாடி திமுக தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டு, அதனை அவர் அணிந்துள்ளார்.

46 ஆண்டுகளுக்கு முன்பு நேரிட்ட விபத்து ஒன்றில் இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 1971ம் ஆண்டு அமெரிக்கா சென்று கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் கருணாநிதி. அப்போதிலிருந்து கறுப்பு நிற தடிமனான கண்ணாடியையே கருணாநிதி பயன்படுத்தி வந்தார்.

காந்தி தாத்தாவின் கண்ணாடியைப் போலவே, திமுக தலைவர் கருணாநிதிக்கும் கறுப்புக் கண்ணாடி ஒரு அடையாளமாகவே மாறியிருந்தது. இந்த நிலையில், சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வகை லேசான கண்ணாடியை கருணாநிதி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.