தமிழக அரசியலில் கடந்த முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக, இடைவிடாமல்  தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்த, குரல் திமுக தலைவர் கலைஞரின் குரல். 

சற்றேறக் குறைய ஒரு அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியல் சக்கரம் அவரை மையப்படுத்திதான் சுற்றி கொண்டிருந்தது.

தினந்தோறும், முரசொலியில்  அவர் தமது தம்பிகளை உடன்பிறப்பே என்று பாசத்தோடு எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும், கேள்வி பதிலிலும், உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை புதைந்து கிடைக்கும்.

ஆனால் கடந்த சில மாதங்களாக, வயது முதிர்ச்சி மற்றும் உடல் நிலை பாதிப்பு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சையும், ஓய்வும் எடுத்துக் கொண்டிருப்பதால், பேச்சும், எழுத்தும் முடங்கி இருக்கிறது.

இந்த சூழ் நிலையில், அவரது சட்டமன்ற வைர விழாவை, ஏழு மாநில முதல்வர்கள் பங்களிப்புடன்  பிரம்மாண்டமாக நடத்த திமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன், அடுத்த மாதம் 3 ம் தேதி, அவரது பிறந்த நாளில், மருத்துவர்கள் அனுமதித்தால் தொண்டர்களை சந்திப்பார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், மருத்துவர்கள் அனுமதி கொடுக்கும் அளவில் அவரது உடல் நிலை இடம் கொடுக்காது என்றே கூறப்படுகிறது.

அவர், இயல்பாக சுவாசிக்கும் நிலைக்கு வந்து விட்டாலும், தொண்டையில் அடிக்கடி சளி கட்டி விடுவதால், செயற்கை சுவாச குழாய் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதாகவே கூறப்படுகிறது.

அதே போல், திரவ உணவுகளே குழாய் வழியாக கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தொண்டர்களை சந்தித்தால், நோய் தோற்று ஏற்பட கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அவரது உதவியாளர் கூடவே இருந்து கவனித்து கொண்டாலும், மகள் செல்வியும் அவ்வப்போது வந்து தமது தந்தையை பார்த்து கொண்டிருக்கிறார்.

செல்வி, உள்ளிட்ட நெருக்கமானவர்கள் வரும் போது, சைகையில் குறிப்பிடும் அவர், பேச முடியாததால் கண் கலங்குவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, தன்னுடைய அனுமதி இல்லாமல், யாரும் தலைவரை பார்க்க அனுமதிக்க கூடாது என்று ஸ்டாலின் உறுதியாக கூறி விட்டாராம்.

அதனால், கலைஞர் தமது பிறந்த நாளில், தொண்டர்களை சந்திப்பது சாத்தியம் இல்லை என்றே கூறப்படுகிறது.