திடீர் உடல்நலக் குறைவால்  காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி…. தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு…

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு  டிசம்பர் 1-ஆம் தேதி ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைப்பாட்டின் காரணமாக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டிசம்பர் 7 ஆம் தேதி அவர் வீடு திரும்பினார். எனினும், சிகிச்சை அளித்த மருத்துவர்களால் வீட்டில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும் அவரின் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியையும் காவேரி மருத்துவமனை பணியாளர்கள் அவர் வீட்டிலேயே மேற்கொள்வார்கள் என்றும் மருத்துவர்கள் சார்பில் கூறப்பட்டது. 

ஆனால் சளித்தொல்லை காரணமாக  டிசம்பர்  15 ஆம் தேதி கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கருணாநிதிக்கு காவேரி மருத்துமனை டாக்டர்கள் அவரது வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அவ்வப்போது அவரது புகைப்டங்கள் மட்டும் வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கருணாநிதி இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கு தொண்டைப் பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருணாநிதியின் மகள்கள் செல்வி, கனிமொழி, மகன்மு.க.தமிழரசு ஆகியோர் கருணாநிதியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

மருத்துவ பரிசோதனை முடிந்து கருணாநிதி இன்றே வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.