விசாரணை, கைது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் எங்களுக்கு புதுசு அல்ல, இதையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம் என தன் தந்தையின் கைது குறித்து சிதம்பரத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும் , காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை டெல்லியில்  உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர், அவரின் கைது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான  கார்த்திக் சிதம்பரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்:-  இந்த கைது நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார், கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் ஊழலுக்கு  2017 ஆண்டில் வழக்கு பதிவு செய்து  இதுவரை முறையாக குற்றப்பத்திரிக்கைக் கூட தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த கைது நடவடிக்கை  உள்நோக்கம் கொண்டது என்றார்.

மோடி மற்றும் அமித்ஷாவை திருப்தி படுத்தும் நோக்கில்  சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். எந்த வழக்காக இருந்தாளும் அதை சட்ட பூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம், இந்த கைது நடவடிக்கை எங்களுக்கு ஒன்றும் புதிது அல்ல என்ற அவர், கடந்த ஆண்டு ஊழல் வழக்கு விசாரனையில் இருந்த  நான் அதை முறியடித்துவிட்டு தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன், எனவே இதை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்றார்.