ஆயுத பூஜை கொண்டாட்டம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரவர்கள் தங்கள் இல்லத்தில் உள்ள வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு பூஜைகள் நடத்தி ஆயுத பூஜை நடத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று முன்தினம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஆயுத பூஜையின்போது துப்பாக்கிகள், அரிவாள்களுடன் சாமி கும்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தை, அர்ஜுன் சம்பத் தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இது குறித்து காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. துப்பாக்கி, அரிவாள்களுடன் ஆயுதபூஜை செய்யப்பட்டதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் தனது பேஸ்புக் பதிவில் இருந்து அதனை நீக்கினார் அர்ஜுன் சம்பத்.

இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே கண்டனத்துக்குள்ளான நிலையில் அர்ஜுன் சம்பத்தைப் போலவே, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் துப்பாக்கிகளை வைத்து ஆயுத பூஜை நடத்திய புகைப்படம் ஒன்று கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அதிர்ந்துபோய் உள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முன்பு, 2 துப்பாக்கிகள், ஒரு அரிவாள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ள புகைப்படம் இடம் பெற்றள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் புகைப்படத்தை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து, கடுமையான விமர்சனங்களை கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கூறி வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும், பூஜையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளுக்கு முறையாக லைசென்ஸ் பெற்றுள்ளது என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.