Karnataka election nobody get full majority told Times now

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி ஆட்சி அமைப்பதில் கிங் மேக்கராக இருப்பார் என டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா சட்டசபைத் தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மே 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தற்போது கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பெங்களூருவில் டேரா போட்டு சூறாவளி பிரச்சாரம் செய்த வருகிறார்.

இதே போல் அங்கு மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த மாநிலம் தொடர்பாக ஏற்கனவே வெளியான கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என அறிவிக்கப்பட்டீந்தது. இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்தியது. இதில் மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் 91இடங்களிலும், பாஜக 89 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்பது தெரிய வந்துள்ளது

கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டம் என்றாலும், 112 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால், தற்போது இந்த கருத்துக் கணிப்பில் இரண்டு தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தனிப் பெரும்பான்மை பெறாது என்றே தெரிகிறது. இதனால் தொங்கு சட்டசபையே அமையும்.

இந்த சூழ்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி ஆட்சி அமைப்பதில் கிங்க்மேக்கராக இருப்பார் என்பது தெரிய வந்துள்ளது.

மும்பையை ஒட்டியுள்ள கர்நாடகா பகுதியில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை தனி மதத்தினராக அங்கீகரிக்க வேண்டும். அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

ஆனால், இப்பிரச்சனையால் லிங்காயத் மக்கள் காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டனர் என்று கூற முடியாது என்று தெரிகிறது. இந்த கருத்துக் கணிப்பில் 21 தொகுதிகளில் காங்கிரசும், 23தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெறும் என்பது தெரிய வந்துள்ளது.

பெங்களூரு நகர் பகுதியில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. நகரங்களைச் சார்ந்த இந்தப் பகுதியில் பாஜக 32 இடங்களை, அதாவது மூன்றில் இரண்டு மடங்கு வெற்றி கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது..



எப்படிப் பார்த்தாலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு உள்ளவர்களுக்கே கர்நாடகாவில் ஆட்சி என்றும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கிங் மேக்கராக இருப்பார் என்றும் அவரது ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைச்ச முடியாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.