கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம்  கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் பதவியை பறித்து நடவடிக்கை எடுத்ததுடன், அவர்கள் வரும் 2023-ம் ஆண்டு வரை  தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.

சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அம்மனு மீது நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய்ரஸ்தோகி மற்றும் கிருஷ்ணாமூராரே ஆகியோர் அமர்வு முன் கடந்த மாதம் விசாரணை நடந்தது. வழக்கறிஞர்கள் வாதம் முடிந்ததை தொடர்ந்து தீபாவளி விடுமுறைக்கு பின் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் கூறி வழக்கை கடந்த அக்டோபர் 25ம் தேதி ஒத்திவைத்தனர்.

இவ்வழக்கில் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்று  எதிர்பார்த்து வரும் நிலையில், கடந்த வாரம் ஹுப்ளியில் நடந்த பாஜக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில்  முதல்வர் எடியூரப்பா பேசியதாக வீடியோ சிடி ஒன்று வெளியாகியது. கடந்த சனிக்கிழமை அன்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய எடியூரப்பா ஆடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில் அவர் பேசியது கட்சி தலைமைக்கு தெரிந்து தான் இந்த 17 சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையும்  கண்காணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்கு ஆதரவின்றி அனைவரும் செயல்படுவதாக ஒரு அதிருப்தியை பேசியிருந்தார். இந்த ஆடியோ வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் சார்பாக கபில்சிபல்  முன்னிலையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டது.

பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் சார்பாக இதே ஆடியோவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி ரமணா இந்த ஆடியோ விவகாரத்தை கருத்தில் கொண்டு அதன் பிறகு தான் 17 எம் எல் ஏக்கள்  தகுதி நீக்கம் குறித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடகாவில் உள்ள  ஆளும்கட்சியான பாஜக மற்றும் முதல்வர் எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.