karnataka cm yeddyurappa first sign
கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, 1 லட்சம் ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து போட்டுள்ளார்.
கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டசபை அமைந்தது. ஆனால் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
காங்கிரஸ் - மஜத கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியபோதும், எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாடியது. நள்ளிரவில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என கூறியதை அடுத்து, இன்று காலை கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார் ஆளுநர் வஜுபாய் வாலா.
இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, விவசாய கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டுள்ளார். வேளாண் துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த எடியூரப்பா, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
