கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பி.ஜே.பி.க்கு ஆதரவாக எந்தவித முன் தயாரிப்புகளும் இல்லாமல் திடீரென ஒரு மெகா ஆதரவு அலை தோன்றியது. அதே வேளையில், இதோ இந்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அதே பா.ஜ.க.வுக்கு எதிராக சட்டென்று கிளம்பியிருக்கிறது ஒரு அரசியல் அலை. 

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், நாடெங்கிலும் பல மாநிலங்களில் பெரிய கட்சிகள் முதற்கொண்டு சிறிய கட்சிகள் வரை திடீரென மோடியை ஆதரிக்க துவங்கின தாமாக முன் வந்து. தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் தே.மு.தி.க, ம.தி.மு.க. என்று முக்கிய கட்சிகள் பி.ஜே.பி.யை ஆதரித்து பெரும் அதிர்வலையை கிளப்பின. தி.மு.க. மிரண்டது, அ.தி.மு.க.வோ லேசாய் அதிர்ந்து படபடத்தது. அந்த தேர்தலில் பி.ஜே.பி. தேசமெங்கும் முரட்டுப் பெரும்பான்மை பெற்று அதிர அதிர ஆட்சி பீடத்தில் வந்தமர்ந்தது. 

இந்நிலையில் பி.ஜே.பி.யின் நான்கரை ஆண்டுகள் கழிந்து இதோ இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நாடெங்கும் பல்வேறு மாநிலங்களில் மோடிக்கு எதிரான அரசியல் அலை உருவாக துவங்கியுள்ளது. தமிழகத்தில் ஸ்டாலின், ஆந்திராவில் சந்திரபாபுநாயுடு, கர்நாடகாவில் குமாரசாமி, டெல்லியில் ராகுல் மற்றும் சோனியா, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, இது போக கம்யூனிஸ்டுகள் என்று பெரும் படையே அவருக்கு எதிராக ஒன்று கூடி நிற்கிறது.

ஆனால், சமீபத்தில் சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடந்த பொதுக்கூட்டத்தில், ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்து வைக்க, அது இந்த மெகா கூட்டணியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மம்தா, அகிலேஷ் யாதவ் ஆகியோர் முரண்பட்டு நிற்கின்றனர். அதிலும் அகிலேஷ் சில படிகள் முன்னேறி, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர் முகாம்கள் பக்கம் புன்னகையை காட்டி வருகிறார். 

இந்த சூழ்நிலையில் தேவகவுடாவின் மகனும்,  கர்நாடக முதல்வருமான குமாரசாமி மோடியை  சந்தித்திருக்கிறார். கூடவே அவருக்கு  சால்வை அணிவித்து, குல்லாவும் போட்டுவிட்டார். ஏற்கனவே குமாரசாமி உள்ளிட்ட டீம் இணைந்து தனக்கு கொடுக்கும் அரசியல் குடைச்சல் போதாதென்று, இப்படி தன் மண்டை மீது கொண்டை வைத்தார் போல் குல்லாவும் மாட்டிவிட்ட குமாரசாமி மீது செம்ம கடுப்புதான் பிரதமருக்கு. 
ஆனாலும் அதை பளிச்சென வெளிக்காட்டாமல், சிறு சங்கடமாய் நெளிந்ததுதான் ஹைலைட்.