வாணியம்பாடி அருகே திமுக நகர கழக பொறுப்பாளர் சென்ற காருக்கு வழிவிடாமல் சென்ற கர்நாடக அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தி, பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெங்களூருவுக்கு கர்நாடக அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. கர்நாடக அரசு பேருந்தை, அந்த வழியாக வந்த திமுக பிரமுகர் கார் ஒன்று முந்த முயன்றது. காருக்கு வழிவிடாமல் அந்த பேருந்து சென்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து ஆத்தரமடைந்து வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் அருகில் பேருந்தை வழிமறித்தனர். கார் ஓட்டுநருக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பேருந்து ஓட்டுநரை காரில் வந்தவர்கள் கடுமையாக தாக்கினர். பேருந்தும் மீது கற்களை வீசியும் சேதப்படுத்தினர். இதில் பேருந்து கண்ணாடிகள் உடைந்து 5 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் ஓட்டுநர் குமரவேலுக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தம்பித்து சென்றது.

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக பிரமுகர் சிவக்குமார், ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வாணியம்பாடி திமுக நகர கழக பொறுப்பாளர் சாரதிக்குமார் உள்பட் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

ஏற்கனவே சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடையில் ஊழியரை தாக்கியது, அழகு நிலையத்திற்குள் நுழைந்து பெண்ணை தாக்கியது, திருவண்ணாமலையில் செல்போன் கடையில் வேலை செய்யும் ஊழியரை தாக்கியது போன்ற சம்பவங்களை தொடர்ந்து தற்போது கர்நாடக அரசு பேருந்து ஓட்டுநரை தற்போது தாக்கியுள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது இப்படிப்பட்ட அராஜகத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் நிலை கேள்விக்குறியாகிவிடும் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.