முதலமைச்சர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் விலக வேண்டும்… கர்நாடக மாநில அதிமுக செயலாளர் அதிரடி….

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா முன்னிருத்தப்பட்டு வருகிறார். ஓபிஎஸ் உள்ளிட்ட கழக முக்கிய தலைவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அவர் விரைவில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஓபிஎஸ் க்கு எதிராக கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி புதிய புயலைக் கிளப்பியுள்ளார். முதலமைச்சர் பதவியில் இருந்து ஓபிஎஸ் உடனடியாக விலகவேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

ஓசூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, ஜெ.வின் தோழி சசிகலாதான் அதிமுக வின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுமட்டுமல்லாமல் சசிகலாவே முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு வசதியாக ஓபிஎஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த புகழேந்தி யார் தெரியுமா?...சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை ஜாமீனில் எடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தவர்… ஜெவுக்காக ஜாமீன் படிவத்தில் புகழேந்தியின் மனைவிதான் கையெழுத்திட்டவர்.

இந்த நெருக்கமே புகழேந்தியை இப்படி செயல்படவைக்கிறது என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்….