இந்தியாவில் உள்ள பழமையான சங்கங்களில் ஒன்று மதுரை  மகாஜனசங்கம். தற்போதுள்ள நாடார் சங்கங்களில் மிகப்பெரிய மற்றும் நூற்றாண்டுகள் கண்ட சங்கம். ஏராளமான கல்வி நிறுவனங்களை மதுரை   மகாஜனசங்கம் நிர்வகித்து வருகிறது. கல்விப்பணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டும் இந்த சங்கம் கூட தற்போது கருணாஸ் பேசிய பேச்சால் அரசியல் ரீதியிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
   
மதுரை மதுரை மகாஜனசங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகராக மட்டும் இருக்கும் போது கருணாஸ் இப்படி பேசியிருந்தால், தாங்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கப்போவதில்லை. திருவாடனை தொகுதியில்   அனைத்து சமுதாய வாக்குகளையும் பெற்றே கருணாஸ் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார். அப்படி இருக்கையில் மாற்று சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் கருணாஸ் பேசியதை ஏற்க முடியாது.


   
தென்மாவட்டங்கள் எப்போதுமே ஜாதி ரீதியாக பதற்றமானவை. ஒவ்வொரு ஜாதியில் உள்ள பெரியவர்களும் இந்த பதற்றத்தை தணிக்க முயற்சித்து வருகிறோம். ஆனால் கருணாஸ் போன்றவர்களின் பேச்சால் சமூக நல்லிணக்கம் கெடும் நிலை உருவாகியுள்ளது. மேலும் தினத்தந்தி போன்ற பாரம்பரிய மிக்க பத்திரிகைகளை நாடார்கள் நடத்தி வருகிறார். இதே போல் தினமணி, இந்த போன்ற நாளிதழ்களை பிராமணர்கள் நடத்தி வருகின்றனர். இந்த மூன்று பத்திரிகைகளுமே ஜாதி கடந்து செயல்பட்டு வரும் நிலையில் கருணாஸ் இந்த பத்திரிகைகளை ஜாதியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை மிக மோசமாக பேசியிருப்பதன் மூலம் கருணாசை ஒரு மன நோயாளி என்று தான் கருத வேண்டியுள்ளது. காவல்துறை அதிகாரிகளையும் கருணாஸ் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள கருணாசை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு கரிக்கோல் ராஜ் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.