உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவிநீக்க கோரிய எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை வெங்கையா நாயுடு நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை எனவும் நிர்வாகம் சரியில்லை எனவும் கடந்த ஜனவரி மாதம் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகோய் ஆகியோர் ஊடகங்களை சந்தித்து குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரம் தொடர்பான விவாதங்கள் எழ ஆரம்பித்தன. இந்நிலையில், காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகளின் சார்பில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்க கோரிய தீர்மான நோட்டீஸ் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளிக்கப்பட்டது. 

ஊழல், நீதித்துறையின் சுதந்திரத்தை காக்க தவறியது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்க கோரி எதிர்க்கட்சிகள் தீர்மான நோட்டீஸை வழங்கின.

இதுதொடர்பாக குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி உள்ளிட்டோருடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய வெங்கையா நாயுடு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என தெரிவித்து எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை இன்று நிராகரித்தார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், தலைமை நீதிபதியை பதவிநீக்க கோரிய தீர்மானத்தை ஆரம்ப கட்டத்திலேயே வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு ஆரம்ப கட்டத்திலேயே பதவிநீக்க கோரிய தீர்மானத்தை நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உரிய விளக்கமளிக்க வேண்டும். தீர்மானத்தை நிராகரிப்பதற்கு முன், உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் மற்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி வெங்கையா நிராகரித்திருக்கிறார். முழு விசாரணைக்கு பின்னரே ஆதாரங்கள் தோன்றும். எனவே தலைமை நீதிபதியை பதவிநீக்க கோரிய தீர்மானத்தை மாநிலங்களவை தலைவர் நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் என கபில் சிபல் தெரிவித்தார். அந்த மனுவை தலைமை நீதிபதி விசாரிக்காத வகையில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் கபில் சிபல் தெரிவித்தார்.