நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி தேர்தல்களில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சி, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த சென்டிமென்ட் தகர்ந்தது. 

2016 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆஸ்டின் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதிமுக வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். ஆனால் மாநிலத்தில் அதிமுக ஆட்சி அமைந்தது. ஜெயலலிதா முதல்வர் ஆனார். 

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த சென்டிமென்ட் முடிவுக்கு வந்துள்ளது. இந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 6,24,302 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார். ஆனால் மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆகவே இந்த சென்டிமென்ட் தகர்ந்துள்ளது. 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கடைசியாக 1991ம் ஆண்டு வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போது காங்கிரஸ் வாகை சூடியுள்ளது. இது குமரி மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.