கன்னியாகுமரி மாவட்ட, தே.மு.தி.க., நிர்வாகிகள், 50 பேர், நேற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க.,வில் இணைந்தனர்.

தமிழக அரசியலில், அசுர வளர்ச்சியடைந்த கேப்டனின் கட்சி, தற்போது தலைவரே உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், கட்சியில் ஐசியூவில் தான் இருக்கிறது. கேப்டன் நிதானமாக இருக்கும் வரை தெளிவான முடிவையே எடுத்து அரசியல் நடத்திவந்த நிலையில், தற்போது முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதால், அதல பாதாளத்தில் கவிழ்ந்துக்கிடக்கிறது கட்சியின் செயல்பாடுகளும், வளர்ச்சியும். 

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக பிஜேபி கூட்டணியில் வாங்கிய 4 சீட்டையும் அனாமத்தா பறிகொடுத்தது. அதிலும் சுதீஷில் தோல்வி கொஞ்சம் நஞ்சம் இருந்த செல்வாக்கும் சரிந்ததாகவே பார்க்கப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியிலுள்ள முக்கிய புள்ளிகள் அமமுக, திமுகவில் கொத்து கொத்தாக சேர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட, தேமுதிக., துணை செயலாளர் ஆட்லின், மகளிர் அணி மாவட்ட துணை செயலர், சுபா உட்பட, 50 பேர், அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், திமுக., செய்தி தொடர்பாளர், டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர், சுரேஷ்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.நேற்று மாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, கருணாநிதி நினைவிடத்தில், ஸ்டாலின் மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.