மறைந்த திமுக தலைவர் கனிமொழியின் மாநிலங்களவை  உறுப்பினர்  பதவிக்காலம் அடுத்த ஆண்டு  ஆகஸ்டில் முடிகிறது. இதனால், அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.,யாக, விரும்புகிறார். அதற்கேற்ப, தொகுதி மேம்பாட்டு நிதியில், துாத்துக்குடிக்கு அதிகமான தொகையை, கனிமொழி ஒதுக்கி உள்ளார். மேலும், இந்த தொகுதியில் உள்ள சில கிராமங்களையும் தத்தெடுத்து, பல்வேறு நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளார்.

துாத்துக்குடி தொகுதியில், கனிமொழி போட்டியிட, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில், ஜன., 8, 9, 10ல், துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, 204 ஊராட்சிகளிலும் நடைபெறும், ஊராட்சி சபை கூட்டத்தில், கனிமொழி பங்கேற்க, அவர் உத்தரவிட்டுள்ளார்.

துாத்துக்குடியில், கனிமொழி போட்டியிட்டால், அவரின் வெற்றி உறுதி என கூறப்படுகிறது. . அந்த மாவட்டத்தில் உள்ள, நாடார் சமுதாய ஓட்டுகள், அவரின் வெற்றிக்கு கை கொடுக்கும்' என, உளவுத்துறையினர், அதிமுக  மேலிடத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நாடார் சமுதாய ஓட்டுகளை வளைக்க, நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான, சரத்குமாரை கூட்டணியில் சேர்க்க, அதிமுக முடிவு செய்துள்ளது. அவரை, கனிமொழிக்கு எதிராக போட்டியிட வைக்கவும், தமிழகம் முழுவதும், பிரசாரத்திற்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமியை சந்தித்த சரத்குமாரிடம், இது குறித்து அவர் பேசியதாகவும் , அவரைச் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய  சரத்குமார், நாடாளுமன்றத்  தேர்தல் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் வரும் ஜனவரி, 14க்கு மேல், கட்சியின் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்யும். திமுகவை எனக்கு பிடிக்கவில்லை என்றும். பிரதமரை, 'சேடிஸ்ட்' என, ஸ்டாலின் கூறுவது  தவறு என்றும் சரத்குமார் தெரிவித்தார்.இதையடுத்து அதிமுக , கூட்டணியில், அவர் இணைவதும், துாத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதும், உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.