சிஏஏ, என்.ஆர்.சி. என்ன என்பதை முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புரிந்துகொள்ள வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 
சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘குடியுரிமைச் திருத்தச் சட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது’ எனத் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்தக் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

 
 இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், “சிஏஏ, என்.ஆர்.சி. என்ன என்பதை முதலில் முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். குடிமக்கள் பதிவேடு தொடங்கும்போது பிரச்னைகளும் தொடங்கிவிடும். இதேபோல சிஏஏ அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்தச் சட்டம் இன்று பாதிக்குமா? நாளை பாதிக்குமா? என்பதைத் தாண்டி அரசியலமைப்பை கொச்சைப்படுத்துகிற சட்டம்.
என்.ஆர்.சி. கொண்டு வந்த பிறகு மக்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்த்து திமுக மட்டுமே போராட்டம் நடத்தவில்லை. நாடு முழுவதுமே போராடுகின்றனர். கருணாநிதியால் சத்துணவில் தமிழ் நாட்டில் முட்டை வழங்கப்பட்டது. ஆனால், இன்றோ வெங்காயம், பூண்டு இல்லாத நிலை. உணவை இங்கு அரசியலாக மாற்றிவருகின்றனர். எல்லாவற்றிலுமே அரசியல் செய்கிறார்கள். மதிய உணவு திட்டத்தில் இன்று அதே அரசியல் நுழைந்துள்ளது” என்று கனிமொழி தெரிவித்தார்.