தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி வாக்காளா் சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார். இதற்கிடையே சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கனிமொழி வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், கனிமொழியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் எதிர்மனுதாரர் சந்தானகுமார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.