தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால், ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட  பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி பங்கேற்க சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

 
அப்போது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வகையிலான வண்ணக் கயிறுகள் கட்டக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டத்தையும், அந்த அறிவிப்பை வாபஸ் பெற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பின்வாங்கியது குறித்தும் கனிமொழி பேசினார்.

 
“அதிமுக ஆட்சியில் தப்பித்தவறி ஒருசில நல்ல விஷயங்கள்  நடந்தாலும், துறையின் அமைச்சர்களே ‘எங்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை’ எனச் சொல்லும் அளவுக்கு மோசமான நிலை தமிழகத்தில் உள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றால், ஆட்சி மாற்றம் வருவதே நல்லது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியை திரும்பவும் திரும்பவும் சரி செய்வதற்கான முயற்சிகளே தொடர்ந்து நடக்கின்றன. இதனால் எந்தப் பலனும் தமிழகத்துக்கு ஏற்படப்போவதில்லை. ஆட்சி மாற்றம் ஒன்றே இதற்கெல்லாம் ஒரே தீர்வு” என்று கனிமொழி தெரிவித்தார்.