திமுகவிற்கு யாருடனும் மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது என திமுக மகளிரணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசும்போது, ’’முதல்வராக அல்ல, அமைச்சராக கூட கனவு காண தகுதி இல்லாதவரையே முதல்வராக வைத்திருக்கிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க பழனிசாமிக்கு தகுதியில்லை. விரைவில் ஸ்டாலின் முதல்வராவார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

 

நாடு தழுவிய அளவில் தேர்தல் ஆணையம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. தங்க தமிழ்செல்வன் மூலம் திமுக - அமமுக கூட்டு வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக எடப்பாடி கூறியிருக்கிறார். திமுகவிற்கு யாருடனும் மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. தேர்தல் ஆணையமும் ஆளும் கட்சியும் கூட்டணி வைத்து செயல்படுவது போல் தோன்றுகிறது. தெலங்கானா முதல்வர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் ஸ்டாலினை சந்திக்கலாம்’’ என அவர் தெரிவித்தார்.

 

முன்னதாக, ’’மே 23 தேர்தல் முடிவுக்கு பிறகு மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது. தேர்தல் தோல்வி பயத்தால் தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன’’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.