மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று  நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில அனைத்து பிரிவு நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்துவது குறித்து கமல்ஹாசன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அடுத்த ஆண்டு புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் அங்கு நிலவும் சூழல் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.


பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் கமல் பேசும்போது, “புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்க வேண்டும்” என்று நிர்வாகிகளிடன் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உத்திகளை வகுத்துவருகிறார். கமலின் தலைமையை ஏற்றால் மட்டுமே ரஜினியுடன் கூட்டணி என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பேசிவருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரியிலும் தனது கவனத்தைத் திருப்பியிருக்கிறார் கமல்ஹாசன்.