தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த சங்கரும், கௌசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2016 -ம் ஆண்டு மார்ச் 13 அன்று உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே சங்கர், கெளசல்யா மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில், சங்கா் உயிரிழந்தார். படுகாயமடைந்த கெளசல்யா, சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தார். இந்த வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றம் வழங்கியது.


இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த  கெளசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்புக்கு விசிக  தலைவர் திருமாவளவன், இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட பலரும் அதிர்ச்சி தெரிவித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இந்தத் தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?” என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.