kamalhasan joining the list of chidambaram and hafees syed says bjp leader

நடிகர் கமலஹாசன் இதழ் ஒன்றில் தன் கருத்துகளை எழுதி வருகிறார். டிவிட்டர் பதிவுகளால் சர்ச்சைகளை வளர்த்தெடுத்த கமல், இப்போது இதழின் எழுத்து வழியே சர்ச்சைகளை வளர்த்தெடுக்க முடிவு செய்து சர்ச்சைக்குரிய விதத்தில் சில கருத்துகளைக் குறிப்பிட்டு வருகிறார். இதுவரையில் தமிழக அரசியலை மையம் கொண்டு வார்த்தைகளில் வறுத்தெடுத்து வந்தவர், இப்போது தேசிய அளவில் கைவைத்துவிட்டார். 

அவர் எழுதிய ஒரு கருத்து இப்போது தேசிய அளவில் சர்ச்சைக்குரியதாகிவிட்டது. முன்பெல்லாம் வலதுசாரி சிந்தனையைக் கொண்ட ஹிந்து அமைப்புகள் வன்முறையில் ஈடுபடாமல் வாதத்தில் ஈடுபட்டு எதிர் தரப்பை வீழ்த்துவார்கள். இந்தப் பழைமையான உத்தி தோல்வியடைந்ததால் தற்போது ஹிந்துக்கள் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. எனவே இனி ஹிந்துத் தீவிரவாதம் இல்லை என யாரும் கூற முடியாது என்றவாறு கமல் எழுதியுள்ள கருத்து இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தைக் கடந்து தில்லியின் கதவுகளைத் தட்டியுள்ள இந்தக் கருத்துக்கு பாஜக., தலைவர்கள் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக., தலைவர் வினய் கட்டியார், கமலஹாசனுக்கு கிறுக்கு பிடித்துவிட்டது என்று காட்டமாகக் கூறியிருந்தார். 

இந்நிலையில், கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ், இதற்காக கமல் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினார். 

மேலும், நாட்டில் ஒரு மனநிலை இப்போது உள்ளது. அது ஹிந்துக்களை தாழ்த்தி தங்களை உயர்த்திக் கொள்வது. இதனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் ஆகியோர் செய்து வந்தனர். ஏனெனில் அப்போதுதான் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை பிடிக்க முடியும் என்று கனவு கண்டனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்களான ப.சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் நாடாளுமன்றத்திலேயே இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதம் உள்ளது என்றனர். அவர்களின் வழியில், அவர்கள் சொன்னதையே இன்று கமல்ஹாசனும் கூறியுள்ளார். இதன்மூலம் ப.சிதம்பரம், ஹஃபீஸ் சயீது ஆகியோர் கொண்ட பட்டியலில் கமல்ஹாசனும் இணைந்து விட்டார். 

காங்கிரஸ் கட்சியின் ஒரு நடவடிக்கை இது. அக்கட்சிதான் இதைப் போன்ற அவதூறுகளைப் பரப்பி பாகிஸ்தானைப் பற்றி உயர்வாகச் சொல்லும். பாகிஸ்தானின் நிலையை உயர்த்த வகை செய்யும். 

நடிகர் கமல்ஹாசனுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் அவர் தன் கண்களைக் கட்டிக்கொண்டு தமிழகத்தை விட கேரளா முற்போக்குச் சிந்தனையுடன் இருப்பதாக சான்று அளிக்கிறார். ஏன் அங்கு நடைபெறும் சிகப்பு பயங்கரவாதம் அவரது கண்களுக்குத் தெரியவில்லையா? கேரளாவில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் தினந்தோறும் அதிகரித்து வருகிறதே... இதையெல்லாம் அறியாமல், தான் நினைப்பதையே சரி என கமல் முரண்டு பிடித்து வருகிறார். இம் மாதிரி கீழான அரசியலை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள் என்று கூறினார். 

கமலஹாசனின் கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர் ராகேஷ் சின்ஹா, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற (PFI) பயங்கரவாத அமைப்பை பாதுகாக்கத்தான் கமல்ஹாசன் இப்படியெல்லாம் பேசி வருகிறார். ஹிந்துக்களின் கலாசாரத்தை கொச்சைப்படுத்துவதையே தனது கொள்கையாகக் கொண்டுள்ளார். இவ்வாறு அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் கமல்ஹாசன், ஹிந்துக்களை தொடர்ந்து அவமதித்து வரும் கமல்ஹாசன், ஹிந்துக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.