டார்ச் லைட்டை தனது சின்னமாக வைத்திருந்தும், கமலுக்கு பார்வைக் கோளாறு என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டல் செய்துள்ளார். 

கடந்த வெள்ளியன்று பானி புயல் ஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் கடுமையான சேதங்களை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியது. ஆனால் மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட மாநில அரசையும் முதல்வர் நவீன் பட்நாயக்கையும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஒடிசா அரசை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார். 

பானி புயலை ஒடிசாவில் கையாண்ட விதம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒடிசா மாநில அரசுக்கு பாராட்டுக்கள். சுயமரியாதை உள்ள எந்தவொரு அரசும் ஒடிசாவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு இன்னும் கஜா புயலை நினைத்து கொண்டிருக்கிறது என அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  

இந்நிலையில் டார்ச் இருந்தாலும் பார்வைக் கோளாறா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை டுவிட்டர் பக்கத்தில் புயல் தொடர்பாக எச்சரிக்கை விடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தையோ, உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் வீரர்களையோ கமல் பாராட்டவில்லை, புயல் வரும் முன்பே ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்த பிரதமரையும் பாராட்ட மனம் இல்லாமல் மௌனியாக இருக்கும் கமல், ஒடிசா முதல்வரை மட்டும் பாராட்டுவது பாரபட்சமானது என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாவே ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை தமிழிசை டுவிட்டரில் தெறிக்கவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.