‘அர்விந்த் கெஜ்ரிவால் எனது நெருங்கிய நண்பராக இருந்தாலும் தமிழக மாணவர்களில் நலனுக்கு எதிராகவோ தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவோ பேசியிருந்தால் அது கண்டிப்பாகக் கண்டிக்கப்பட வேண்டியதுதான்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய ஆடியோ செய்தி  ஒன்று தேர்தலை ஒட்டி டெல்லி மக்களுக்கு சென்றது.  அதில், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் டெல்லி வாசிகளின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆடியோ பெரிய அளவுக்கு வைரல் ஆனது. இதற்கு எதிராக பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆம் ஆத்மி கட்சித்தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர். இதையடுத்து கமல் தன்னுடைய கண்டனத்தை கெஜ்ரிவாலுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இன்று காலை அர்விந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு பதில் அளித்த கமல்,’’ அர்விந்த் டெல்லிக்கு அவர் மாநில அந்தஸ்து கேட்டுவருகிறார். எனவே அவரது பேச்சு அதனுடைய அடிநாதமாக அது இருக்கும். நான் இதை போன் செய்து  எப்போது வேண்டுமானாலும் அவரிடம் நேரடியாக கேட்க முடியும். அவர், தமிழக மாணவர்கள் அங்கு வந்து வாய்ப்பு பெறும் போது, டெல்லி மாணவர்கள் அங்கு வாய்ப்பு பெற முடியாமல் இருப்பது குறித்து பேசி இருப்பார். அல்லது மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக இப்படி பேசி இருப்பார். மற்றபடி தமிழக மாணவர்களுக்கு எதிராகவோ தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவோ அவர் பேசக்கூடியவர் அல்ல. அப்படிப் பேசியிருந்தால் அது கண்டிக்ககூடியதுதான்’ என்று வழக்கம்போல் குழப்பியடித்தார்.