’கொடநாடு விவகாரத்தை அவ்வளவு சுலபமாக விட்டுவிடமுடியாது. அது அரசியல்வாதிகள் மக்களுக்கும் தங்களுக்கும் செய்துகொண்ட துரோகமாகவே எனக்குப்படுகிறது’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

 நேற்று மக்கள் நீதி மய்யத்தின் மேற்கு மண்டலத்தை திறந்துவைத்து உரையாடிய அவர், “நான் குழந்தையாக இருந்தபோது என்னை தோளில் துக்கி வைத்து எப்படிக் கொண்டாடினார்களோ... அதே உற்சாகத்தோடு ஒரு கலைஞனாக என்னை தோள் கொடுத்து உயர்த்தி விட்டவர்கள் தமிழர்கள். அவர்களுக்கு நான் செய்யும் என் கடமை, என் தோளை அவர்களுக்காக வழங்குவது. அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்” 

ஸ்டாலின் மனு கொடுக்கலாம். கொடநாடு விவகாரம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. அதிகாரிகளோ அல்லது தேவைப்பட்டால் மேலிடத்திலிருந்தோ இதை ஆராய வேண்டும். கொடநாடு துரோகத்தின் சின்னமாக மாறியிருக்கிறது. மக்களுக்கும், அவர்கள் தமக்கும் செய்துகொண்ட ஒரு துரோகத்தின் சான்றாக கொடநாடு உள்ளது” என்றார்.அதேபோல் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் மட்டும் தனி ஆளாக முடிவு செய்ய இயலாது. அதைக் கட்சி முடிவு செய்யும். இது எங்களுக்காக மட்டும் எடுக்கும் முடிவல்ல. தமிழர்களுக்காகவும் சேர்த்து எடுக்கும் முடிவு. எனவே அவசரப்பட்டு எடுக்க முடியாது” என்றார்.

டெல்லியை நீக்கிவிட்டு தனியாக அரசியல் செய்ய இயலாது என்றும் தான் இந்தியன், முதலில் தமிழன் என்றும் கூறிய கமல்ஹாசனிடம் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்னவென்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கொள்கை என்பது மாறாதது. கொள்கையை நிறைவேற்றுவதற்குத் திட்டங்கள் தீட்டுவோம். அந்தத் திட்டம் சரியில்லை என்றால் அதை மாற்றிவிட்டு வேறு திட்டம் தீட்டுவோம். திட்டம் மாறும்போது கொள்கை மாறிவிட்டதாக யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. அதுபோன்ற திட்டங்கள் ஏராளமாக உள்ளது. அவற்றையெல்லாம் புதிதாக சொல்ல வேண்டியதில்லை.
 என்றார்.