மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காதது குறித்து ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு மண்ணைக் கவ்வின. 37 இடங்களில் படுதோல்வி அடைந்தன. அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தவிர வேறு யாரும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார், அதிமுக ராஜ்யசபா எம்.பி வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

வைத்திலிங்கத்தை விட ஓ.பி.எஸ் மகன் மத்திய அமைச்சரவை ரேஸில் கடைசி வரை இருந்தார். ஆனால், அவரது பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ‘’மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் இல்லை என்பது வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது. 

தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது கோரிக்கை’’ எனத் தெரிவித்தார். அதாவது ஓ.பி.எஸ் மகனுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கலாம் என்கிற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.