தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் முகவர்கள் இல்லாமல் இருந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் காலியாக இருக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் 71.80 சதவீத வாக்குகளும் இடைத்தேர்தலில் 72.62 சதவீத வாக்குகளும் பதிவாகின. தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
பொதுவாக வாக்குச்சாவடிகளில் கட்சிகள் சார்பில் முகவர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் நியாயமாகவும் பாரபட்சம் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கட்சிகளின் சார்பில் முகவர்கள் வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்படுவார்கள். தேர்தலில் வாக்களிக்க வருவோர் விவரங்களை முகவர்கள் குறித்துகொள்வார்கள். குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்குப்பதிவு நடந்தது என்பதை முகவர்கள் முன்னிலையிலேயே தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்துவார்கள். எனவே தேர்தலில் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் என்பது மிகவும் முக்கியம்.
தமிழகதில் பெரு நகரங்கள் முதல் கிராம பஞ்சாயத்துக்கள் வரை கிளை அமைப்புகளைக் கொண்டிருக்கும் கட்சிகள் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக வாக்குச்சாவடி வாரியாக பெரிய கட்சிகள் தங்கள் முகவர்களை நியமிக்கும். தற்போது புதிதாக கட்சி தொடங்க உத்தேசித்துள்ள ரஜினிகாந்தும் தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகளுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஆர்வம் காட்டியதும் இந்த அடிப்படையில்தான்.


ஆனால்,  கடந்த ஆண்டு அரசியல் கட்சித் தொடங்கி, இந்தத் தேர்தலில் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் முகவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக சார்பில்தான் வாக்குச்சாவடி முகவர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நீதி மய்யம் சார்பில் எல்லா வாக்குச்சாவடிகளிலும் முகவர்களைக் காண முடியவில்லை என பிற கட்சிகள் சார்பில் முகவர்களாகப் பணியாற்றிவர்கள் தெரிவிக்கிறார்கள்.
வாக்குச்சாவடியில் முகவர்களை நியமிக்க வேண்டும் என்றால், முதலில் கட்சி உறுப்பினர்களை நகரங்கள் தொடங்கி, கிராம பஞ்சாயத்துகள் வரை சேர்க்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் வாக்குச்சாவடிகளில் முகவர்களை நியமிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்தத் தேர்தலில் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் கட்சி முகவர்களை வாக்குச்சாவடி வாரியாக கமல் தயார் செய்வார் என எதிர்பார்க்கலாம்.