மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக கமல்ஹாசன் தகவல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கினார். அக்கட்சியின் சின்னமாக பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டது. அதில், மக்கள் நீதி மய்யம் தென்சென்னை, வடசென்னை, கோவை உள்ளிட்ட பல தொகுதிகளில் லட்சக்கணக்கில் வாக்குகளைப் பெற்றது. இதனால் 4 ஆம் இடத்தைப் பிடித்தது. மொத்தமாக 38 தொகுதிகளில் 15,62,316 வாக்குகளைப்பெற்ற மக்கள் நீதி மய்யம் 4 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றது. இது மொத்த வாக்கு சதவீதத்தில் 3.7% ஆகும்.

இதை தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயாராகிவிட்டது. நல்லவர்கள் தமது கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார்.