வரும் 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நடிகர் கமல்ஹாசன்  ‘2021 நமக்கான ஆட்சி’ என்ற புதிய ஸ்லோகனை ஏற்படுத்தி, அந்த ஸ்லோகனின் கீழ் கூட்டங்களை நடத்த முடிவு செய்திருக்கிறார்.
கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் 4 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது. நகர்ப்புறங்களில் அக்கட்சிக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்திருந்தது. இதனால், உற்சாகமடைந்த கமல், 2021 தேர்தலை எதிர்கொள்ள இப்போதே நிர்வாகிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக மக்கள் நீதி மய்யத்தில் விரிவாக்கப் பணிகள் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான கூட்டத்துக்கும் கமல் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் மேல் மட்டத்திலிருந்து ஒவ்வொரு பகுதியிலும் நகர்ப்புறங்களில் வார்டுகள், ஊராட்சி பகுதிகள் வரை கட்சி நிர்வாகிகளை நியமிப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய குழு அமைப்பது பற்றியும் பேசப்பட உள்ளது. 
'2021 நமக்கான ஆட்சி' என்ற தலைப்பில் இந்தக் கூட்டங்களை நடத்த கட்சி நிர்வாகிகளுக்கு கமல் உத்தரவிட்டிருக்கிறார். முதல் கட்டமாக மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டல கூட்டம் நடைபெற உள்ளது. பிறகு நெல்லை மண்டலம் கூட்டம் நடைபெற உள்ளது.