கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதன் பிறகு தொடர்ந்து மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம், நிர்வாகிகள் நியமனம், பிரச்சனைகள் தொடர்பான அறிக்கைகள் என்று அரசியலில் கமல் தீவிரம் காட்டி வந்தார். உறுப்பினர் சேர்க்கை மந்தமாக இருந்த போதும், விடாமல் ஏதேனும் வித்தியாசமாக செய்து மக்கள் நீதி மய்யம் என்று ஒரு கட்சி இருப்பதை அவ்வப்போது மக்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருந்தார்.
   
சென்னையில் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக கமல் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். டி.டி.வி தினகரன் சார்பில் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டார். இப்படியாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதோ ஒன்றை கமல் செய்து வந்தார். ஆனால் விஸ்வரூபம் 2 மற்றும் பிக்பாஸ் 2 ஆகியவற்றில் கமிட்டான பிறகு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து கமல் விலகிவிட்டார் என்றே கூறலாம்.


   
ஒன்று இரண்டு முறைவிமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்ததோடு அரசியல் தொடர்பாக கமல் வேறு எதையும் பெரிதாக பேசவில்லை. இதே போல் கமலின் மக்கள் நீதி மய்யத்தை புரமோட் செய்ய மும்பையில் இருந்து அழைத்துவரப்பட்ட மாந்த்வி ஷர்மா மற்றும் அவரது டீமூம் கூட ஒரு மாத காலமாக பிக்பாஸ் மற்றும் விஸ்வரூபம் 2 புரமோசனில் பிசியாகிவிட்டனர். விண்ணைத் தொடும் அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது குறித்து தற்போது வரை கமல் ஒன்றும் பேசவில்லை. குறைந்தபட்சம் அறிக்கை வெளியிடவில்லை. ஏன் ட்விட்டரில் கூட பதிவு ஏதும் போடவில்லை. 
   
இதே போன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வி குறித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துவிட்டனர். ஆனால் கமல் தற்போது வரை வாய் திறக்கவில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிப்பது, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்சுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருவது குறித்தும் கமல் ஒன்றும் பேசாமல் இருக்கிறார். 


இதற்கு எல்லாம் உச்சமாக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி மீது அதே துறையின் பெண் எஸ்.பி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி அமைதியாக இருக்கிறது. சோஃபியா விவகாரத்தில் கூட முதல் நாளே அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெளிவாகவும் நேர்த்தியாகவும் கூறிவிட்டனர். ஆனால் கமலோ மறுநாள் பிற்பகலுக்கு பிறகு, அதிலும்செய்தியாளர்கள் தொடர்ந்து நச்சரித்த காரணத்தினால் யாருக்கும் எதுவும் புரியாத வகையில் கமல் ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.


   
இப்படியாக கமலின் அரசியல் நடவடிக்கைகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்க அவரை நம்பி கட்சியில் சேர்ந்தவர்களும், மேலிட நிர்வாகிகளும் அடுத்து என்ன என்பது தெரியாமல் ஏதேதோ செய்து கொண்டிருக்கின்றனர். கமல் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா? அல்லது எடுத்த முடிவில் இருந்து  பின்வாங்குவாரா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் தீட்டுகிறாரா? என்று கூட தங்களுக்கு புரியவில்லை என்று மாவட்ட அளவிலான நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.