kamal has no self knowledge to tackle social issues said admk party man
டிவிட்டர் வழியே தன் கரங்களால் கருத்துக் களம் கண்டு வந்த கமல், முதல் முறையாக களத்தில் கால் பதித்து நடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
எண்ணூர் துறைமுகக் கழிமுகம், சாம்பல்குளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை திடீரென ஆதரவாளர்கள் ஓரிருவருடன் வந்து பார்வையிட்டார் கமல்.
அங்கே கள நிலவரத்தை அறிந்து, அப்பகுதி மக்கள் சிலருடன் உரையாடி அவர்களின் சிரமங்களைக் கேட்டறிந்தார்.
கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் கலகப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை டிவிட்டரில் பதிவு செய்த மறுநாளே நேரில் வந்து பார்வையிட்டு ஆச்சரியப் படுத்தினார். கமலின் இந்த நேரடி ஆய்வுப்பணிகளுக்கு பெரும்பாலான அரசியல்வாதிகளும், சமூக நல ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் அதிமுக.,வைச் சேர்ந்தவரும் முன்னாள் கோவை எம்.எல்.ஏ.,வுமான கோவை ஏ.கே.செல்வராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்தப் பகுதிகளில் அரசு நிறுவனங்கள் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்காவிட்டால் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை எப்படி நிறைவேற்ற முடியும். மின்சாரம், பெட்ரோல், டீசல் இவை எல்லாம் இல்லாமல் 1945ஆம் ஆண்டில் இருந்ததுபோல் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் இருக்க வேண்டும் என்று கமல் நினைக்கின்றாரா என்று கமலுக்கு கேள்வி எழுப்பும் செல்வராஜ், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் அப்பட்டமாகக் குற்றம் சொல்லும் கமலுக்கு சிந்திக்கவோ, செயல்படவோ சக்தி இல்லை; கமலுக்கு சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லை என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, வல்லூர் அனல் மின் நிலையம், வடசென்னை மின் நிலையம் மற்றும் கொசஸ்தலை ஆற்று கழிமுகப் பிரச்னைகள் குறித்து கமல் டிவிட்டரில் கூறியிருந்தார்.
சென்னையின் மின் தேவையைக் கருத்தில் கொண்டு 2007ல் துவங்கப்பட்டது வல்லூர் அனல் மின் நிலையம். பின்னர் 2012, 2013,2014 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் மூன்று யூனிட்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு அலகும் 500 மெ.வா. மின் உற்பத்தி இப்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
