‘இரு மாநில மக்களின் நல்லுறவை சீர்குலைக்கும் இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன்.
மேகதாதுவில் ரூ.9 ஆயிரம் கோடியில் 66 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்ட முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் பெங்களூரு, மைசூர், மாண்டியா ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுகுடிநீர் திட்டமும், மின்சார தேவையை பூர்த்தி செய்ய நீர்மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும் என கர்நாடகா அறிவித்தது.
ஆனால் இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்டது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சட்டப் பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், 'மேகதாதுவில் அணை கட்டுவதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்று இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருக்கிறது' என அறிவித்தார். இந்த அறிவிப்பை விவசாய அமைப்பினர் வரவேற்றுள்ளனர். அதேவேளையில் தமிழக விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு, மேகதாது திட்டத்தை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், தமாகா நிறுவனர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டினால், அது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிடும் என்பதறிந்தும் குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகாவில் ஆளும் பாஜகவும், காங்கிரஸூம் இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன. இரு மாநில மக்களின் நல்லுறவை சீர்குலைக்கும் இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தன் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
