தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15% இடங்களும் மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. 

மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட(ஓபிசி) பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு தரப்பில் மட்டுமல்லாது, தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் ஆளுங்கட்சியான அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம். இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் வாதத்தை ஏற்க முடியாது. மத்திய அரசின் கல்வி நிலையங்கள் அல்லாத கல்வி நிலையங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எந்தவிதமான  தடையும் இல்லை. மருத்துவக் கவுன்சில் விதிகளில் மாநில இட ஒதுக்கீடு பின்பற்றக் கூடாது என எந்த விதிகளும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம், சமூக நீதியை காத்துவிட்டதாக ஆளும் தரப்பு மார்தட்டி கொண்டிருக்கும் வேளையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அரசுக்கு குட்டு வைத்துள்ளார். 

ஓபிசி இட ஒதுக்கீடு குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று முதல்வர் பழனிசாமி டுவீட் செய்திருந்தார். நீதிமன்ற தீர்ப்பிற்கு நன்றியும் வரவேற்பும் தெரிவித்து அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து கூட்டறிக்கையும் வெளியிட்டனர். 

இந்நிலையில், நீதிமன்றத்தின் இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு குறித்து டுவீட் செய்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, ஓபிசி இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.சமூகநீதி காத்திட தாமதமோ,மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.