திடீரென கமலுக்கு கூட்டணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது திமுகவின் தோழமை கட்சிகளை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெறும் பேரணியில் கமலுக்கு ராஜ மரியாதை கொடுத்து திமுக அழைத்திருப்பது கூட்டணியை மனதில் வைத்து தான் என்று யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதெல்லாம் ரஜினி தலைமையிலான கூட்டணிக்கு கமல் சென்றுவிடுவதை தடுப்பதற்கான ஏற்பாடு என்று திமுகவிலேயே பேசிக் கொள்கிறார்கள். அதே சமயம் திடீரென கமலுக்கு கூட்டணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விசிக மற்றும் மதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கீட்டில் பெரும் இழுபறி நீடித்தது. இறுதியில் வைகோவிற்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை கொடுத்து டீலை முடித்தது திமுக. இதே போல் உதய சூரியன் சின்னத்தில் ரவிக்குமாரை போட்டியிட வைத்து திருமாவை சமாதானம் செய்தார் ஸ்டாலின். இப்படி கடந்த முறை இடம்பெற்றிருந்த கட்சிகளுக்கே திமுக கூட்டணியில் திருப்தி அளிக்கும் வகையில் ஸ்டாலினால் தொகுதிகளை ஒதுக்க முடியவில்லை.

நாடாளுமன்ற தேர்தலிலேயே இப்படி என்றால் சட்டமன்ற தேர்தலில் சொல்லியா தெரிய வேண்டும். சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கணிசமான இடங்களை பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் தற்போது முதலே கணக்கு போட்டு வருகின்றன. கடந்த 2011 தேர்தலில் இநத் கட்சிகளில் மதிமுக, இடதுசாரிகள் இல்லாமலேயே திமுகவால் சுமார் 119 தொகுதிகளில் தான் போட்டியிட முடிந்தது.

தற்போது மேலும் கமல் கட்சியும் திமுக கூட்டணியில் வந்து சேர்ந்தால் நமது நிலை என்னவாகும் என்று தற்போதே திருமா, வைகோ போன்றோர் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். காங்கிரசை பொறுத்தவரை அகில இந்திய அளவிலான கட்சி என்பதால் திமுக கூட்டணியில் கணிசமான இடங்களை அந்த கட்சி பெற்றுவிடும். இதே போல் இடதுசாரிகளுக்கும் ஸ்டாலின் தயக்கம் இல்லாமல் தூக்கி கொடுத்துவிடுவார், நமது பாடு தான் திண்டாட்டம் என்று வைகோ, திருமா யோசிக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் திமுகவை பொறுத்தவரை கணிசமான இடங்கள் போனாலும் பரவாயில்லை ரஜினி போன்ற ஒரு பெரும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் தலைமையில் 3வது அணி அமைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. அந்த வகையில் ரஜினி மூலமாகவே தற்போது கமலுக்கு திமுக கூட்டணியில் ராஜமரியாதை கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஒருவேலை ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் திமுகவின் நடவடிக்கைகளில் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்று அடித்துக் கூறுகிறார்கள் அரசியல்நோக்கர்கள்.