நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக பல தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இறுதியில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பெருவெற்றி பெற்றுள்ள ஸ்டாலினுக்கு மனபூர்வமான பாராட்டுகள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாகச் செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.