தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதைக் கண்டித்து என்று குரல் கொடுத்தேனோ அன்றே நான் அரசியலுக்கு  வந்துவிட்டேன் என்றும், அதை உணராமல் அமைச்சர் ஜெயகுமார், எச்.ராஜா போன்றோர் பேசி வருகிறார்கள் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என கண்டனக் குரல் எழுந்து வருகிறது. இது தொடர்பாக விளக்கமளித்த கமலஹாசன், தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடப்பதாக கருத்துத் தெரிவித்தார்.

இதனால் கொதித்தெழுந்த தமிழக அமைச்சர்கள் கமலஹாசனை கண்டபடி திட்டித் தீர்த்தனர். அவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் போன்றோர் மிரட்டல் விடுத்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயகுமார் போன்றோர் கமலஹாசன் அரசியலுக்கு வந்தபின் எங்களைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என கிண்டலடித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,  இந்திதிணிப்பு எதிராக என்று குரல் கொடுத்தேனோ அன்றே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றும், நான் அரசியலுக்கு என்றோ வந்து விட்டதாகவும்,  துணிவுள்ள சினிமாக்காரர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது டிஜிட்டல் யுகம் என்பதால் அரசுத்துறை ஊழல் குறித்த தகவல்களை மக்களே www.tn.gov.in/ministerslist -ல் அனுப்பலாம் என்றும் ஊழல் குறித்து அந்தந்த துறைக்கு புகார் அழியுங்கள் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.