அரசியலுக்கு வந்த பிறகு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை கமல் நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3 தற்போது நடந்து வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி வருகிறது. கமல் ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வரும் வேளையில் இந்த நிகழ்ச்சியை அவர் தனது அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறார் என்கிற விமர்சனமும் எழுந்து வருகிறது. 

பிக்பாஸ் பிரபலமாகி வந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், ’’அரசியலுக்கு வந்த பிறகு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை கமல் ஹாசன் நடத்தக்கூடாது. தமிழகத்திற்கு முதலீடுகளை பெறும் விவகாரத்தில் என்ன சாதித்து விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..? ஏற்கனவே நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் தமிழகத்திற்கு ஒரு பயனும் ஏற்படவில்லை. 

அப்படி இருக்கும்போது, தற்போது வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்கிறோம் எனக் கூறுவதா? முதலீடுகளை பெற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை’’ என்று அவர் கூறினார்.