டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 
 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய அதிமுக முயற்சி செய்தது. சபாநாயகருக்கு எதிராக திமுக கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸ் காரணமாக மூவரும் உச்ச நீதிமன்றம் சென்று பதவியைக் காப்பாற்றிக்கொண்டார்கள். அண்மையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கும் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் அதிமுக தலைமை அழைக்கவில்லை.


இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு எதிராக செயல்படமாட்டேன் என்று கள்ளக்குறிச்சி பிரபு அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. இந்த அரசுக்கு எதிராக செயல்பட மாட்டேன். தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ-வாகவே செயல்படுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  
நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. ‘எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். அதிமுகவை கைப்பற்றுவோம்’ என ஸ்லோகன்போல டிடிவி தினகரன் சொல்லிவந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு அக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கட்சியின் முன்னணியினர் பலர், அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவருகிறார்கள்.
டிடிவி தினகரனுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தவந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்களில் பிரபு அதிமுகவுக்கு ஆதரவாகத் திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.