தமிழக முதல்வரை சந்திக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டுவந்தார்கள். அமமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு செயல்பட்டுவந்தார். அமமுக என்ற கட்சியை அரசியல் கட்சியாக தினகரன் பதிவு செய்த பிறகு மூன்று பேரும் அமமுக அடிப்படை உறுப்பினராகமல் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துவந்தார்கள்.
இந்த மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக தலைமை முயற்சி மேற்கொண்டது. சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவால் மூன்று எம்.எல்.ஏ.க்களின் பதவியும் தப்பியது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய பிறகு அறந்தாங்கி ரத்தினசபாபதியும் விருத்தாச்சலம் கலைச்செல்வனும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள்.
“அம்மாவின் அரசை கலைக்க வேண்டும் என்று தினகரன் கூறியதால், அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இனி அதிமுக எம்.எல்.ஏ.க்களாக செயல்படுவோம்” என்று ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் அறிவித்தனர். இவர்கள் வரிசையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டுவந்தது.


இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று பிரபு தெரிவித்துள்ளார். அதேவேளையில் அதிமுக அரசுக்கு எதிராக செயல்படமாட்டேன் என்று ஏற்கனவே பிரபு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.