மதுரையில் கலைஞர் நூலகம்.. லண்டனிலிருந்து ஆதரவு தெரிவித்த பென்னிகுக் பேரன், பேத்தி..!
மதுரையில் கலைஞர் நூலகம் கட்ட பென்னிகுக்கின் பேரன், பேத்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளனர்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில், பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் வாழ்ந்ததாக கூறி, அங்கு கலைஞர் நினைவு நூலகம் கட்ட பெரியாறு - வைகை பாசன ஆயக்கட்டு விவசாய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுகவும் சட்டப்பேரவை உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆனால், பென்னிகுக் 15.01.1841-ல் பிறந்து, 09.03.1911-ல் இறந்துவிட்டார் என்றும் அதன் பின்பே 1912-ல் பொதுப்பணித்துறை இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டு 1913-ல் தற்போதைய கட்டிடம் முடிக்கப்பட்டதாக அரசு நிர்வாகம் தெரிவித்து வருகிறது. பென்னிகுக் அங்கு வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் கலைஞர் நூலகம் தொடர்பாக பென்னிகுவிக் பேரன் பேத்திகளான டயானா கிப் மற்றும் டாம் கிப் ஆகியோரின் வீடியோ பதிவை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “கலைஞர் நூலகமும் பென்னிகுக் அவர்களை தொடர்புபடுத்திய சர்ச்சை முடிவுக்கு வந்தது. முல்லைபெரியாறு அணையை கட்டிய பென்னிகுக்கின பேரன்கள் டயானா கிப் மற்றும் டாம் கிப் ஆகியோருடன் மதுரை கலைஞர் நூலகம் கட்டும் இடம் தொடர்பான சர்ச்சையை விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “இச்சர்ச்சை தேவையில்லை. இந்நூலகம் கட்ட பென்னிகுக் குடும்பத்தார் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எங்கள் தாத்தா(பென்னிகுக்) இப்பகுதியின் வளர்ச்சிகாகப் பாடுபட்டார். மதுரையும் இந்த மொத்த பகுதியையும் அவர் விரும்பினார்.
இப்பகுதியின் வளார்ச்சிக்காவே பெரியாறு அணையை கட்டினார். இந்த நூலகம் அமைய எங்கள் குடும்பம் உறுதுணையாக இருக்கும் என்றும் கலைஞர் நூலகத்துக்கு லண்டனில் இருந்து இயன்றால் புத்தகங்களை பரிசளிப்போம் என்று தெரிவித்தார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.