கடந்த 16 ஆம் தேதி கஜா புயல், நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே  அதிகாலை கரையை கடந்தது. இதனால், நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட, 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், கடும் சேதத்தை சந்தித்தன.

இந்த மாவட்டங்களில், 90 சதவீத மின் அமைப்புகள் சேதமடைந்ததால், ஒரு வாரத்திற்கும் மேலாக, மின் வினியோகம் முடங்கியுள்ளது. குடிநீர், உணவு உள்ளிட்டவை கிடைக்காமல், மக்கள் சிரமப்படுகின்றனர்.

அவர்களுக்கு, தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை, நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றன. இந்நிலையில், புயலால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு,அரிசி, சர்க்கரை உள்ளிட்ட, 28 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய, பரிசு பெட்டகத்தை, தமிழக அரசு வழங்க உள்ளது.


தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில்  புயலால் பாதிக்கப்பட்ட, 2.50 லட்சம் பேர், அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், அரசு சார்பில், தலா, 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது.

தென்னை, கரும்பு, வாழை என, விவசாயத்தை நம்பி இருந்த பலர், புயலால், வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அதன்படி, தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டையில், கணக்கு எடுக்கப்பட்டதில், 4.68 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், ஒவ்வொரு கார்டுதாரருக்கும், தலா, 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ ரவை, உப்பு, குளியல் மற்றும் சலவை சோப்புகள், இரண்டு துண்டு, நைட்டி, வேட்டி, சேலை, தேயிலை துாள், டார்ச் லைட் என, 28 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய, பரிசு பெட்டகம் வழங்கப்பட உள்ளது.


இந்த பொருட்களை, நுகர்பொருள் வாணிப கழகமும், கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்து, திருச்சி, விழுப்புரத்தில் உள்ள, சேமிப்பு கிடங்குகளில், 'பேக்கிங்' செய்து வருகின்றன. புயல் பாதிப்புகளை பார்வையிட, நாகை வரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை , அந்த பொருட்களை, பாதிக்கப்பட்ட சிலருக்கு வழங்க உள்ளார்.

அதை தொடர்ந்து, அவை, ரேஷன் கடைகள் வாயிலாக, மற்றவர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.