Kadambur Raju says state government not involved in income tax raid

மதுரை

தமிழகத்தில் நடைபெறும் வருமானவரிச் சோதனைக்கும், மாநில அரசுக்கும் தொடர்பில்லை என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து நேற்று மதுரை வந்தார் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ. அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

"மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட எண்ணினார். அவரது எண்ணப்படி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இதுவரை 22 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

மேலும், எம்.ஜி.ஆரின் சாதனைகள், பெருமைகளை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ள அவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் எடுக்கும் பணியை ரமணா பிக்ஸர்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது

தமிழகத்தில் நடைபெறும் வருமானவரிச் சோதனைக்கும், மாநில அரசுக்கும் தொடர்பில்லை. அவர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் பணி செய்கின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகத்தில் கூட வருமானவரிச் சோதனை நடைபெற்றது. அவர் ஐந்து, ஆறு முறை விசாரணைக்குச் சென்று ஒத்துழைப்பு கொடுத்தார். அவர்களின் விசாரணை வெளிப்படையானது" என்று அவர் தெரிவித்தார்.