உயர்ஜாதியினரில் பொருளாதாரத் தில் பின்தங்கியோருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையே நொறுக்கு வதாகும். சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இட ஒதுக்கீடு என்பதையே தலைகீழாக மாற்றுவதற்கான முன் னோட்டமே! மருத்துவக் கல்லூரிக்கான இடங்களைக் கூடுதலாகத் தருகிறோம் என்ற மத்திய அரசின் தூண்டிலில் சிக்கக் கூடாது என்றும், இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில்  மு.க.ஸ்டாலின் அவர்கள் வைத்த வேண்டுகோளும், முதலமைச்சர் அதனை ஏற்றதும் வரவேற்கத்தக்கவை - பொதுப் பிரச்சினையில் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம் என்று  கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2014 இல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசு முதல் முறை பதவியேற்று, தனது 5 ஆண்டு கால ஆட்சியை முடித்து, பொதுத் தேர் தலைச் சந்திக்கும்முன் கடைசி நாடாளு மன்றக் கூட்டத் தொடரில், பொருளா தாரத்தில் பின்தங்கிய முன்னேறிய  ஜாதி ஏழைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் கூடுதலாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்கும் ஒரு அரசியல் சட்டத் திருத் தத்தை அவசர அவசரமாக 5 நாள்களில் இரு அவைகளிலும் அதிக விவாதமின்றி நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்பு தலும் பெற்று சட்டமாக்கப்பட்டது.

உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு - அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை தகர்ப்பு!

அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டு மானத்தின் - சமுகநீதி இட ஒதுக்கீடு எனும்  அடிப்படையையே உடைத்து நொறுக்கும் திட்டமிது. வெறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக் காடு இட ஒதுக்கீடு என்பதை அன்றே நாமும், தி.மு.க. உட்பட மற்றும் பல சமுகநீதி அமைப்புகளும் சுட்டிக்காட்டியதோடு, இந்த 103 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் வழக்குகளும் தொடரப்பட்டன.

வரும் 30.7.2019 அன்று தலைமை நீதிபதி தலைமையில் அரசியல் சட்ட அமர்வு இதனை விசாரிக்க இருப்பதாகவும் செய்தி கள் வந்துள்ளன!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரு மசோதாக்களின் நிலை என்ன?

இவ்வாண்டு கல்வி ஆண்டு தொடங்கும் நிலையில், நீட்' தேர்வு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில்  ஒருமனதாக நிறைவேற்றிய இரண்டு மசோதாக்கள் அப்படியே கிடப்பிலே போடப்பட்டு, நீட்' தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

5 மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கொடுமைகள் தொடர்கின்றன.

தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அரசு இந்தப் பொருளாதார அடிப்படையிலான 10 சத விகித இட ஒதுக்கீட்டை இவ்வாண்டு செயல் படுத்தாது என்று அறிவித்துள்ளது.

ஆனால், மருத்துவ இடங்களை நாங்கள் 10 சதவிகிதம் கூடுதலாகத் தருவதோடு, மேலும்  25 சதவிகிதம் இடங்களைக் கூடுத லாகத் தருவோம். உடனே ஏற்று 10 சதவிகித இட ஒதுக்கீடு கொள்கையை அமுல் படுத்துங்கள்'' என்று மத்திய அரசு தமிழ்நாடு அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவே தெரிகிறது.

இதுவரை இதனை தமிழ்நாடும், கருநாடா காவும் ஏற்காத மாநில அரசுகளாகும்!

கூடுதல் இடங்கள்யாருக்கு?

எவ்வளவு கூடுதல் இடங்கள் தமிழ் நாட்டிற்குக் கிடைத்தாலும், நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலைவரை, அதன் தர வரிசைப் பட்டியலின் அடிப் படையில்தானே இடம் அளிக்கப்படும்? பிற மாநிலத்தவரே அதிகமாக உள்ளே நுழைவது தானே நடக்கும்; இதனால் தமிழ்நாட்டு  ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் அந்தக் கூடுதல் இடங்களில் பயன்பெற முடியாது என்பது யதார்த்தம்தானே!

ஏதோ அந்தக் கூடுதல் இடங்கள் எல் லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்காக மட்டுமே கிடைப்பது போன்ற மாய் மாலத்தை நம்பி ஏமாறக் கூடாது. இந்த அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது தெரியுமா?

மத்திய அரசுக்கு 15 விழுக்காடு இடங்கள் எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பில், மேற்பட்ட படிப்பு (சூப்பர் ஸ்பெஷா லிட்டிஸ்) 50 விழுக்காடும் தருகின்ற முறை யைத் துணிந்து மாநில அரசு ரத்து செய்து, அதனை தமிழ்நாட்டு மாணவர்களுக்கே தரலாமே!

மத்திய அரசுக்கு நாம் தருவது (15 சதவிகிதம்) கட்டாயமான இட ஒதுக்கீடு அல்ல. மாநில அரசுகள் காட்டும் சலுகை (Concession) தான். எனவே, அதை மாநில அரசு மத்திய அரசுக்குத் தர வேண்டியதில்லை; காரணம், நீட்' தேர்வு மூலம் பிற மாநில மாணவர்கள். 15 விழுக் காட்டிற்கு மேலேயே நமது மருத்துவக் கல்லூரி இடங்களை ஏராளமாகப் பெற்று வருகின்றார்களே!

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான சட்டமன்ற உரை

நேற்று (2.7.2019) சட்டமன்றத்தில்  ஸ்டாலின் ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தியுள்ளார்.

"முன்னேறிய வகுப்பினருக்காக அவசர அவசரமாக மத்திய அரசு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு அதனை செயல் படுத்தினால், மருத்துவப் படிப்பில் 25 சதவிகித இடங்களைக் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற செய்தியும் வந்துகொண் டுள்ளது. சமுகநீதியின் தாயகத்தில் வாழக் கூடிய நம்முடைய நாக்கில் தேனைத் தடவி, ஏமாற்ற நினைக்கிறது மத்திய அரசு.

கூடுதல் இடங்கள் என்ற தூண்டிலில் சிக்காதீர்!

25 சதவிகிதம் என்ற தூண்டிலை மத்திய அரசு நம்மீது வீசி, அதில் நாம் சிக்கிக் கொள் கின்றோமா என்று பார்த்துக் கொண்டிருக் கின்றது - அதில் ஒரு நோட்டம் பார்க்கின்றது என்றெல்லாம் விளக்கி, "உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதில் விவாதித்து, அதன்மூலமாக ஒரு நல்ல முடிவு எடுக்கவேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் - முதல்வர் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், இதனை ஏற்று, இப்பிரச்சினையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி கருத்திணக்க அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று  அறிவித்திருப்பது முற்றிலும் வரவேற்கத் தகுந்ததே!

சட்டமன்றத்திற்குள் தற்போது எதிர்க் கட்சி உள்பட 5 கட்சிகள்தான் இடம் பெற்றுள்ளன. முக்கிய அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கூட்டத்திற்கு அழைப்பது சிறப்பான ஜனநாயக அணுகுமுறை.

இன்றைய அ.தி.மு.க. ஆட்சி எம்.ஜி.ஆர். ஆட்சி, அம்மா  (ஜெயலலிதா) ஆட்சி'' என்று கூறிக் கொள்ளப்படுகின்ற நிலையில், அவ்விரு தலைவர்களின் ஆட்சிகளில் பொருளாதார அடிப்படை ஏற்கப்படவில்லை என்பதும், 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான 9 ஆவது அட்ட வணைப் பாதுகாப்புடன்கூடிய தனித்த சட்டம்மூலம் இட ஒதுக்கீடு உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு; ஒரே பூமி திராவிட பூமி - சமுகநீதி மண் - பெரியார் மண் என்ற பெருமையை உடைக்கவே மருத்துவக் கல்லூரிக்கான கூடுதல் இடங்கள் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை' மாநில அரசுக்குத் தந்து, தங்களின் உயர்ஜாதியினருக்கான அரசமைப்புச் சட்ட விரோத 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தமிழ்நாட்டையும் வலைப் பின்னலுக்குள் கொண்டுவர மத்திய பி.ஜே.பி., அரசு துடியாய்த் துடிக்கிறது. இதில் ஏமாந்து விடக்கூடாது - எச்சரிக்கை!

தமிழ்நாட்டின் முயற்சியால் பிற மாநிலங்களுக்கும்கூட பலன்!

காலங்காலமாய் காக்கப்பட்டுவரும் இட ஒதுக்கீடு என்பது தந்தை பெரியாரின் முயற்சியால், அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம், அதன்பின் நமது முயற்சியால் சமுகநீதி காத்த வீராங்கனை'மூலம் 76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் இடம்பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ.) அரசின் காலத்தில், மத்தியக் கல்வி நிறுவனங்களில் கல்வி ஒதுக்கீடு - 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் எல்லாம் தமிழ்நாட்டின் முயற் சியால் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்டோரும் பயனடையும் சட்டங்கள் ஆகும்.

எனவே, சில இடங்கள் என்ற கண்ணி வெடி'' புதைக்கப்பட்டுள்ளதைக் கவனி யாமல், சமுகநீதியின் அடிப்படையைக் காலப்போக்கில் தகர்க்கும் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. அரசு துணை போனது என்ற பழி' அதற்கு ஏற்பட்டு விடக்கூடாது.

பொதுப் பிரச்சினையில் ஒன்று சேர்வோம்!

இதில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற அரசியல் இல்லாது, சமுகநீதிக் கொடி தலை தாழாமல் பறக்க அனைவரும் இணைந்து ,ஒன்றுபட்டு ஒருமித்த நிலைப்பாடு எடுப்போமாக! பொதுப் பிரச்சினைகளில் இப்படிப்பட்ட தமிழக அரசின் அணுகுமுறை தொடர வேண்டும். எனக் கூறியுள்ளார்.