எல்லாவற்றையும்விட முக்கியம் ‘சிக்கனக் கோடரி’ என்ற ஒரு சொற்றொடர் முக்கியம். முதலில் அது அமைச்சரவையிலிருந்து தொடங்கவேண்டும். 35 அமைச்சர்களுக்குப் பதில் 12 பேர் போதுமே என்று தி.க. தலைஞர் கி.வீரமணி அதிரடியாக யோசனை தெரிவித்துள்ளார்.


கொரோனாவால் தற்போது நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகள் நிதி இல்லாமல் தள்ளாடிவருகின்றன. நிதி சிக்கனத்தைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் பலவிதமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் தமிழகத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று திக தலைவர் கி.வீரமணி அதிரடியாக யோசனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 
அவருடைய அறிக்கையில், “கொரோனாவின் பாதிப்பு மக்களுக்குத் தொற்று, நோய்க் கொடுமை, பலியாவது போன்ற கொடுமைகள் ஒருபுறம்; ஆனால், அதன் தவிர்க்க இயலாத விளைவுகள், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு உள்பட பல்துறைகளையும் அதலபாதாளத்தில் பொருளாதார வறட்சி என்ற (Depression) நிலைக்குத் தள்ளும் பேர பாயம் மறுபுறம் உள்ளது. மத்திய - மாநில அரசுகள் இதனை எப்படி எதிர்கொண்டு நிதி நிலைமையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும், சுகாதாரத்தையும் சீரடையச் செய்யப் போகின்றன என்பது நாட்டோர் முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்!


ஓய்வு பெற்ற நிர்வாகப் பெருமக்களின் கருத்துகளைக் கேட்டுத் திரட்டியுள்ளவற்றை நாம் தமிழக அரசின் கவனத்துக்கும், செயலாக்கத்திற்கும், பரிசீலனைக்கும் வைக்க விரும்புகிறோம். எல்லாவற்றையும்விட முக்கியம் ‘சிக்கனக் கோடரி’ என்ற ஒரு சொற்றொடர் முக்கியம். முதலில் அது அமைச்சரவையிலிருந்து தொடங்கவேண்டும். 35 அமைச்சர்களுக்குப் பதில் 12 பேர் போதுமே! இதனால் பல வகையில் நிதிச் செலவு பலவும்கூட (பி.ஏ.,க்கள், காவலர்கள், வீடுகள்) குறையும் வாய்ப்பு ஏற்படும். அரசு அதிகாரிகள் இனிவரும் காலங்களில் பயணங்களை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் தேவை. மேல் வகுப்புகள் தருவதைக் குறைக்கலாம். தேவையற்ற பல கமிஷன்கள் போட்டு, வேலை செய்யாமலே பல மாதங்களுக்கான சம்பளம் பெறுவது போன்று, மக்களின் வரிப் பணம் வீணாகும் நிலை இப்போது!


உதாரணத்திற்கு ஜெயலலிதா மரணம்பற்றி ஆராயும் கமிஷனால் என்ன பயன்? இப்போது அது செயல்படாத நிலையில், அதனை முடித்து வைக்கலாம். (Wind up all the Unnecessary Commissions) அதுபோல, பலப்பல கமிஷன்கள் உள்ளன. இனி புதிய நியமனங்கள் தேவையில்லை. அரசு இலாக்காகளைக் குறைப்பது பற்றியும் ஒரு சீர்மை ஏற்படுத்த, ஒரு சிறு குழு அமைத்து உடனடியாக அதன் பரிந்துரை களுடன், தேவையற்று பெருகிய துறைகளைக் குறைத்து, அதில் பணிபுரிகிறவர்களை மற்ற பணிகளுக்குப் பயன்படுத்தி - வெளியே அனுப்பாமல் செய்யலாமே!


கொரோனா காலத்தின் பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணும் வகையில், எப்படி திருமணங்களுக்கு 20, 30 பேருக்குமேல் கூட வேண்டாம் என்று கட்டுப்படுத்துகிறீர்களோ, அதுபோல், தேவையற்ற அரசு நிகழ்வுகளை நடத்தாமல், குறிப்பிட்ட துறைகள், குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்குரிய Monitoring Cell என்ற கண்காணிப்புக் குழுக்களை - ஏற்கெனவே உள்ள அதிகாரிகளையே பொறுப்பாளர்களாக்கி செய்யலாம்.” என்று அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.