நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம் அந்த வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முழுமையாக நிரப்பிவிட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசிவருகிறார்கள். விசிக, சிபிஐ கட்சிகளைத் தொடர்ந்து மேலும் கட்சித் தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மு.க. ஸ்டாலினை இன்னும் யாரும் சந்தித்து பேசவில்லை. இந்நிலையில் ஸ்டாலினை ஏன் சந்தித்து பேசவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசியபோது, “ தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்  17 அன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  உள்ளாட்சியில் எத்தனை இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது, எத்தனை இடங்களை திமுகவிடம் கேட்பது, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள பகுதிகள் எவை என்பது பற்றியெல்லாம் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம்.


திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார்கள். நாங்கள் இன்னும் சந்தித்து பேசவில்லை. இதற்குக் காரணம், நானும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் பிசிராந்தையர்-கோப்பெரும் சோழரைப் போல ஒருவரையொருவர் பார்க்காமலேயே பல விஷயங்களை பேசிக் கொள்வோம்.


மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது மிகப்பெரிய தவறு. எங்கே சிவசேனா ஆட்சியை அமைத்து விடுமோ என்ற அச்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சரியான ஆளுமைக்கு வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியுள்ளார்.  தற்போது வெற்றிடம் என்று தமிழகத்தில் எதுவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம் அந்த வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முழுமையாக நிரப்பிவிட்டார்.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.