கடந்த 2 மாதத்துக்கு முன், திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகர் கமல், தமிழக அரசில் சிஸ்டம் சரியில்லை என கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், பேய் மற்றும் ஆவியை தெர்மாக்கோலை கொண்டு கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்தார். இதனால், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை கடுமையாக கமலை சாடி வந்தனர்.

இதோபோன்று நடிகர் கமல், தொடர்ந்து, கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு பதிலாக அமைச்சர்களும் பேட்டி அளித்து வருகின்றனர்.  அமைச்சர் சி.வி.சண்முகம் அஜீத்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு ஏன் வரவில்லை என கூறினார். அதேபோல் அமைச்சர் ஜெயகுமார், தைரியம் இருந்தால், கமல் அரசியலுக்கு வரட்டும் என தெரிவித்தார்.

நடிகர் கமலுக்கு, ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, கமலுக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமல் கருத்து கூறியதில் எந்த தவறும் இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு குடிமகன் ஆட்சியை பற்றி விமர்சனம் செய்ய முழு உரிமை உண்டு.

கமல் விமர்சனம் செய்தார். அப்படி அவர் செய்த விமர்சனத்தை ஆட்சியாளர்கள் பொறுமையாக கேட்டறிந்து உரிய பதில் அளிக்க வேண்டும். அவது அவர்களது கடமை. அதைவிடுத்து ஆட்சியாளர்கள் கோபப்படுவது தவறு. உரிய விளக்கத்தையும், பதிலையும் தரவேண்டியது ஆட்சியாளர்களின் கடமை, அரசியல்வாதிகளின் கடமை.

கமல் ஒருமையில் பேசினார் என்பதை ஒரு விதத்தில் ஏற்க வேண்டும். ஒருவருக்கு கோபம் வந்தால், நீ... வா... போ.. என பேசுவார்கள். அது அவர்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடு தவிர, அதை தவறாக சித்தரிக்க கூடாது. தன்னை அறியாமல்,கோபப்பட்டு பேசுதால், வரும் வார்த்தை அது.

கமல் கூறும் கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் தவிர, அவருடன் போட்டி போட்டு நிற்க கூடாது. இதனால், அமைச்சர்களின் மரியாதை குறைந்துவிடும். அவரது கருத்தை விமர்சனம் செய்ய கூடாது. குறை சொல்ல கூடாது. அப்படி செய்தால், ஆட்சியாளர்களின் மரியாதை குறைந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.