ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்கமுடியாது! என வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று, இப்படித்தான் ஆகும் என்று நான் ஏற்கனவே கூறினேன்! என்று சொல்லியுள்ளார் டாக்டர்.ராமதாஸ்.

(மருத்துவரய்யா இப்போ நீங்க சைடுல சோசியம் பார்க்க ஆரம்பிச்சிட்டீகளா? அப்படியே நம்ம பொண்ணுக்கு எப்ப கலியாணம் ஆகுமுன்னு ஒரு தபா கையை பார்த்து சொல்லுங்களேம்.)

*       அரசின் திட்டங்களை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இனி வரும் படங்களில் வைக்க மாட்டோம் என்றெல்லாம் உத்தரவாதம் கொடுக்க முடியாது! என்று டைரக்டர் முருகதாஸ் தன் வக்கீல் மூலமாக கூறியுள்ளார்.

(அதானே, அடுத்து எவன் எழுதுன கதையை, வசனங்களை கையில ‘எடுப்பாரோ’? இவர்கிட்ட போயி உத்தரவாதம் கேக்குறது எந்த ஊரு நியாயமுங்ணா?)

*       ஒரு கட்சியானது தொகுதி பங்கீடு செய்து, அதற்கான உடன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்து போட்டால் மட்டுமே கூட்டணி கட்சி என்று சொல்லிக் கொள்ள முடியும்! என துரைமுருகன் கருத்து சொல்லியுள்ளார்.

(யண்ணே, இப்போ என்ன? திருமாவும், வைகோவும் காட்பாடிக்கு வந்து உங்களை சந்திக்கணும் அவ்வளவுதானே! ம.ந.கூ. பிரதர்ஸ் காட்பாடிக்கு ரெண்டு டிக்கெட்டை போடுங்க பாஸ்.)

*       எங்களுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தால் எங்களுக்கு முஸ்லீம்கள் ஓட்டு விழாது, அவர்களுக்கு இந்துக்களின் ஓட்டு விழாது. எனவே தி.மு.க.வுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை! என பி.ஜே.பி.யின் ராஜ்யசபா எம்.பி. இல.கணேசன் கூறியுள்ளார்.

(ப்பார்றா, அந்த காலத்துல வாஜ்பாயிக்கு இல்லாத அரசியல் ஞானம் இந்தப் புள்ளைக்கு இருக்குது. இது தெரியாம வாஜ்பாயி கூட்டணி வெச்சுட்டாரே?)

*       இந்தியாவில் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும், பிரதமர் நேரில் பார்ப்பதுதான் மரபு. ஆனால், தமிழகத்திற்கு இதுவரை வரவில்லை. இது வருத்தமளிக்கிறது. தமிழக பா.ஜ.க.வினர் பிரதமருக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்! என அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி வருந்தியுள்ளார்.

(அண்ணே, மைண்ட் வாய்ஸுன்னு நினைச்சு நீங்க சத்தமா பேசிட்டு இருக்கீங்க. இது டெல்லி காதுல விழுந்து, பிரதமரை அனுப்புறதுக்கு பதிலா ஐ.டி.யை அனுப்பிட போறாய்ங்க. சூதானம், சூதானம் மு.சா-னா!)